சென்னை: பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 11 நபர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்துவிட்டு ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்ற நபரை இன்று (ஜூலை 14) அதிகாலை போலீசார் மாதவரம் பகுதிக்கு அழைத்துச் சென்றபோது அவர் போலீசை தாக்க முயன்றதாகவும் இதனால் பாதுகாப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரவுடி திருவேங்கடத்தை இரண்டு ரவுண்டுகள் போலீசார் சுட்டதாகவும், அதில் அவரது வலதுகை தோள்பட்டை, நெஞ்சில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அங்கே உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நபர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்திலும், அவர்கள் ஆயுதங்கள் பதுக்க வைத்திருந்த இடத்திலும் காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
போலீசார் எத்தனை ரவுண்டுகள் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்?, ரவுடி என்ன மாதிரியான ஆயுதங்களால் போலீசாரை தாக்க முயன்றார்?, எந்த இடத்தில் ஆயுதங்களை பதுக்கி வைத்து இருந்தார்?, என்னென்ன ஆயுதங்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன?, சில நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அங்கு எவ்வளவு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன?, வேறு எங்காவது நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா? உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.