திருநெல்வேலி:கூடங்குளம் அருகே இருக்கன்துறை பகுதியில் கல்குவாரியில் மண் சரிவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து பழவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட கல்குவாரியில் அலுவலர்கள் ஆய்வு செய்து அவை தற்காலிமாக மூடப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து மத்திய கனிமவளத் துறை விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், "விபத்து நடைபெற்ற இடத்தில் ட்ரோன் கேமராவை வைத்து சர்வே எடுத்துள்ளோம். கல்குவாரி அனுமதி பெற்று இயங்கி வந்துள்ளதா? என்பது குறித்து மத்திய கனிமவளத்துறை பாதுகாப்பு இயக்குநரகம் விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளோம். விசாரணை நடந்து முடிந்த பிறகு தான் விதிமுறை மீறப்பட்டிருக்கிறதா? என்று தெரியவரும்," என்று ஈடிவி பாரத் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், முதற்கட்ட விசாரணையில், விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்றும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிம வளங்கள் எடுக்கப்பட்டதாக கூறவில்லை. தொடர்ந்து விசாரணை முடிந்த பிறகு முழு விவரம் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரணையில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வந்துள்ளது. இதில், இருக்கன் துறை பகுதியில் ராமசாமி என்பவருக்குச் சொந்தமாக தினேஷ் ப்ளூ மெட்டல் பெயரில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 18) புதன்கிழமை மாலை, கல்குவாரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
மண் சரிவு:
இதில், மிகப்பெரிய பாறாங்கல் சரிந்து, கீழே கற்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹிட்டாச்சி (Hitachi) பொக்லைன் எந்திரம் மீது விழுந்துள்ளது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து பழவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.