தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழப்பு.. காரணம் என்ன? - GYM OWNER DIED IN SALEM

சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த  ஜிம் உரிமையாளர் மஹாதிர் முஹமது
உயிரிழந்த ஜிம் உரிமையாளர் மஹாதிர் முஹமது (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 11:49 AM IST

சேலம்:சேலத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை அண்ணா நகர் தெருவை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மஹாதிர் முஹமது (36). இவர் தாதுபாய்குட்டை பகுதியில் உதிரி பாகங்கள் கடை வைத்துள்ளார். மேலும், குகை ஆற்றோர வடக்கு தெருவில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.17) மாலை சுமார் 7 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருடன் உடற்பயிற்சி செய்த பிறர் சென்ற நிலையில் இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, உடற்பயிற்சி நிலையத்தில் நீராவி குளியல் எடுத்துள்ளார். இந்நிலையில் இரவு 9 மணியளவில் அவரது தாய் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், மஹாதிர் முஹமது அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கடனை அடைக்க மூதாட்டியின் 4 சவரன் தாலியை பறித்துச் சென்ற இளைஞர் கைது!

இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜிம்முக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் நீராவி குளியல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால், கண்ணாடியால் செய்யப்பட்ட குளியல் அறையை உடைத்து, மஹாதிர் முகமதுவை மீட்டுள்ளனர். இதில், அவரது காதில் ரத்தம் வந்துள்ளது. இதனையடுத்து,உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஹரிசங்கரி ஆகியோர் ஜிம்மில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் மஹாதிர் முஹமதுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளதும், அளவுக்கு அதிகமாக அவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து, இது குறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details