சென்னை: மதுரவாயல், கண்ணன் நகர் பகுதியில் கடந்த 4 மாதங்களாக ராஜா - தேவி(32) தம்பதியினர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்த தம்பதிக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆன நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் தேவி டெய்லராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிய தேவி, வீட்டிலிருந்த குழந்தைகளை வெளியே சென்று விளையாடுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் கதவை மூடிக்கொண்ட தேவி, நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை என்பதால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, தற்கொலை செய்து கொண்டு தேவி இறந்த நிலையில் கிடந்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து உடனே மதுரவாயல் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தேவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மதுரவாயல் போலீசார், தேவியின் தற்கொலைக்குக் காரணம் என்ன? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஓட்டு போடுவதற்காவது வண்டி அனுப்புங்க".. தேர்தல் பிரச்சாரத்தையே அறியாத திருநெல்வேலி காணி பழங்குடியினர்! - LOK SABHA ELECTION 2024