சென்னை:தாம்பரம் அடுத்த இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா(28). ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவர் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ சவாரிக்காக கார்த்திக் ராஜா காத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் கார்த்திக் ராஜாவை ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதில், பலத்த காயமடைந்த கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தாம்பரம் துணை ஆணையர் பவன் குமார் தலைமையிலான போலீசார், கார்த்திக் ராஜாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலைக்கான காரணம் என்ன? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, குரோம்பேட்டை டி.எஸ்.லட்சுமணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ்(50). இவர் சொந்தமாக லாரி ஒன்று வைத்து தோல் கழிவுகளை ஏற்றுச் செல்லும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சபரி என்பவருக்கு, தாமஸ் ரூ.30 ஆயிரம் கடனாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பணத்தைத் திருப்பிக் கேட்ட பொழுது சபரிக்கும், தாமஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.