தஞ்சாவூர்: கும்பகோணம் சோலையப்பன் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 58) வணிகராகவும், 13வது வட்ட திமுக பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவரது மகன் வெங்கடேஷ் பெங்களூருவில் மென்பொருள் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். சீனிவாசனின் மனைவி மற்றும் மகள் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன் நேற்று காலையில் இருந்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் இருந்து சீனிவாசன் வெளியே வரவில்லை என அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்த சீனிவாசன் மனைவி, உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தலையில் காயங்களுடன் சீனிவாசன் சமையலறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
சீனிவாசன் வீட்டில் தடுமாறி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்திருக்கலாம் என எண்ணி அவரது குடும்பத்தினர் இறுதி காரியங்கள் செய்ய தொடங்கினர். இதற்கிடையே பெங்களூருரில் இருந்து வந்த சீனிவாசனின் மகன் வெங்கடேசன், தலையில் காயங்களுடன் தந்தை உயிரிழந்துள்ளார் என்பதால், அவரது மரணத்தில் சந்தேகமடைந்து, இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.