சென்னை:சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் துறையினர் சென்னை, வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தை கண்காணித்தபோது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.