சென்னை: போதை பொருட்களை விற்பனை செய்துவந்த தனியார் பொறியல் கல்லூரி மாணவர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரசின் போதையில்லா தமிழகம் வழிகாட்டுதலின்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அவர்கள் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவலில் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தலை கண்டுப்பிடித்து தடுக்கும் வகையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் V-3 ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரி சாலை பகுதியில் ஜெ.ஜெ.நகர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (21) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடமிருந்து 17 LSD ஸ்டாம்புகள் மற்றும் 3 கிராம் ஒ.ஜி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கார்த்திக்கிடம் விசாரணை செய்ததில் அவர் கொடுத்த தகவலின் பேரில் அரவிந்த் பாலாஜி, (20) வத்சல் (21) ,ஆருணி(20) திரிசண் சம்பத் (20), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 94 LSD ஸ்டாம்புகள். 48 MDMA மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.