தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச மகளிர் தினம்: 5 ஆயிரம் பெண் போலீசார் இணைந்து பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு..!

Women's Day: சென்னையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சுமார் 5 ஆயிரத்து 50 பெண் காவலர்கள் மற்றும் ஆளிநர்கள் இணைந்து பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வடிவமைப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

police done a awareness program due to womens day in chennai
சர்வதேச மகளிர் தினம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 9:13 AM IST

சென்னை: சென்னை பெருநகரக் காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்புக்காகத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய காவல் உதவி செயலி மற்றும் அவள் திட்டம் மூலம் பெண்களுக்கு அளிக்கப்படும் தற்காப்பு பயிற்சி, சைபர் குற்ற விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் சென்னை போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் இந்தியாவிலேயே அதிகமான பெண் காவலர்கள் அடங்கிய மாநிலமாகவும் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவருக்கும் அறியும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உதவி மைய எண்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் திட்டங்களைச் சென்னை காவல் துறையில் உள்ள 5 ஆயிரத்து 767 பெண் காவலர்கள் மற்றும் ஆளிநர்கள் சேர்ந்து வடிவமைக்கவும், இதனை உலக சாதனையாகச் செய்யவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று மாலை சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை காவல் துறையைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வடிவமைப்பு நிகழ்ச்சியை, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்.

இதில் 5 ஆயிரத்து 50 பெண் காவலர்கள் மற்றும் ஆளிநர்கள் இணைந்து பெண்கள் உதவி மைய எண்களான 1091, 181 மற்றும் குழந்தைகள் உதவி மைய எண் 1098 ஆகிய எண்களின் வடிவத்திலும், நிர்பயா பெண்கள் பாதுகாப்புத் திட்டமான அவள் மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றின் எழுத்துக்கள் வடிவிலும் நின்று பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை உருவாக்கி அசத்தினர்.

ஒரே நேரத்தில் 5 ஆயிரத்து 50 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒன்று கூடி விழிப்புணர்வு வடிவத்தை மேற்கொண்ட இந்த நிகழ்வை வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் யூனியன் அமைப்பு உலக சாதனையாக அறிவித்தது. மேலும், இந்த அமைப்பின் நிர்வாக அதிகாரி ஷெரிபா இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கான சான்றிதழ்களைச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரிடம் வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் உயர் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம்; உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் - இரா.சிவா

ABOUT THE AUTHOR

...view details