சென்னை : தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மாநாட்டிற்கு மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுத் திடல் பகுதியில் சுமாா் 75 ஆயிரம் நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போடப்படவுள்ளன. மேலும், மாநாட்டுப் பகுதியில் சுமாா் 300 நடமாடும் கழிப்பறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, பெரியார், காமராஜர், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் கட்-அவுட்டுகளுடன் விஜய்யின் கட் அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தமிழன்னை, சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போன்றோரின் கட் அவுட்டுகளும் வைக்கப்பட உள்ளது.
மாநாட்டு முகப்புப் பகுதியில் அதி உயர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர வாகன நிறுத்துமிடங்கள், இதரப் பகுதிகள், மாநாட்டுத் திடல் மற்றும் வெளிப்பகுதிகள் என பல்வேறு இடங்களில் சுமாா் 1,100 (ஹை பீம்) மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், 10 எஸ்பி-க்கள், 15 ஏடிஎஸ்பி-க்கள், 50 டிஎஸ்பி-க்கள் உட்பட 5500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், மாநாடு நடைபெறும் நாளில் கட்சியின் தலைவா் விஜய் வரும் பகுதிகளை கடலூா் மாவட்ட எஸ்.பி ராஜாராம் நேற்று ( அக் 24) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த வழிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.