திருப்பத்தூர்:திருப்பத்தூரில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பத்தூரில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணிற்கு திருமணமாகி 10 வருடங்களாகும் நிலையில், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அவரது கணவர் பெங்களூருக்கு வேலைக்குச் சென்றுள்ளதும், இவர் தனியாக வீட்டில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரது தொலைப்பேசி எண்ணை கொண்டு விசாரணை செய்ததில், அவருக்கு இரண்டு தொலைப்பேசி எண்ணில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தை மீறிய உறவு:தொலைப்பேசி எண்ணின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (29) மற்றும் குமரேசன் (32) ஆகியோரை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், உயிரிழந்த பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த குமரேசனும் கடந்த 7 வருடங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும், இதற்கிடையில் குமரேசன் சிங்கப்பூருக்கு சென்ற நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் அந்த பெண் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.