சென்னை:சென்னை தாம்பரம் அடுத்த படப்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்புராயன் பத்மினி தம்பதியினர். இவர்களுக்குச் செந்தில் குமார் (வயது 42) மற்றும் ராஜ்குமார் (வயது 39) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு இடையே அடிக்கடி சொத்து சம்பந்தமாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகத் தனது இரண்டு மகன்களுக்கும் சொத்தை சரிபாதியாக சுப்புராயன் பிரித்துத் தந்துள்ளார். இதில் ராஜ்குமாருக்குக் கொடுக்கப்பட்ட சொத்து படப்பை பிரதான சாலையில் இருந்ததால், அதில் கடைகளைக் கட்டி வாடகைக்கு விடலாம் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.
இதனால், மற்றொரு மகனான செந்தில்குமாரின் மனைவி மேனகா நமக்கு ஏன் அந்த இடத்தை வழங்கவில்லை எனக் கூறி கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த செந்தில்குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த அவரது சகோதரர் ராஜ்குமாரை வெட்டி கொலை செய்து விட்டுக் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து, வீட்டில் தனியாக வசித்து வந்த மேனகாவுக்கும், செந்தில்குமாரின் நண்பரான ராஜேஷ் கண்ணனாவுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்று மாதங்கள் பிறகு சிறையில் ஜாமீனில் வெளியே வந்த செந்தில்குமார் சில நாட்களிலே காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவரது தாய், மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் செந்தில்குமாரின் தந்தையான சுப்புராயனை, மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
தனது மகன் மற்றும் கணவனை இழந்த துயரிலிருந்த பத்மினி தனது முதல் மகனைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி மணிமங்கலம் போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுப்புராயனை கொலை செய்த மூன்று பேரிடம் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
சினிமாவை மிஞ்சிய கொலை:போலீசார் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் காணாமல் போனதாகக் கூறப்படும் செந்தில்குமாரை. அவர் மனைவி மேனகா உடன் மூவரும் சேர்ந்து கொலை செய்து செஞ்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைத்து விட்டதாகப் பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், இவை அனைத்தும் சொத்துக்காகச் செய்ததுதான் எனவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, மேனகா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்யச் சென்ற போது மேனகா தலைமறைவாகியது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், சித்தாலப்பாக்கம் பகுதியில் மேனகா சுற்றித்திரிவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்து. இதனையடுத்து, அவரை கையும் கலவுமாகப் பிடித்த போலீசார், மணிமங்கலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சொத்துக்காக முதலில் கணவரின் தம்பியான ராஜ்குமாரைக் கொலை செய்ததையும் பிறகு மாமனார் சுப்புராயனை கொலை செய்ததையும், தனது கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் செந்தில்குமாரைக் கொலை செய்ததையும் மேனகா ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேனகாவை சிறையில் அடைத்தனர்.சினிமாவை மிஞ்சும் பாணியில் கொலை செய்து விட்டுத் தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கிய அதிமுக.. முக்கிய குழுக்கள் அறிவிப்பு!