தஞ்சாவூர்: கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாத்திமாபுரத்தில் விஸ்வா என்பவர் கடந்த 3ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து படுகாயம் அடைந்த விஸ்வா கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த விவகாரத்தில் தொடர்புடைய கெயில் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி, அருண்குமார் மற்றும் பால்சாமி (எ) அஜய் ஆகிய நான்கு பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே, கும்பகோணம் மாநகராட்சி வார்டு 24வது வட்ட மாமன்ற உறுப்பினர் ரூபின்ஷாவின் கணவரும், விசிக பிரமுகருமான அலெக்ஸ் என்பவரின் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ள போலீசார் நீதிமன்ற உத்தரவை நாடினர்.
அதனைத் தொடர்ந்து, விசிக பிரமுகர் அலெக்ஸ் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பகோணம் மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அலெக்ஸ் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது படுக்கையறையில் இருந்த கட்டிலின் அடியில் பார்த்த போது கத்தி, அரிவாள்கள், இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சோதனையை தீவிர படுத்தினர். அப்போது, கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த கெயில் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி, அருண்குமார் மற்றும் பால்சாமி (எ) அஜய் ஆகியோரும் அந்த மரக்கட்டிலின் அடியே பதுங்கி இருப்பது கண்டு திகைத்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேலும், பயங்கர ஆயுதங்களோடு கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் பதுங்கிருந்த வீட்டின் உரிமையாளர் விசிக பிரமுகர் அலெக்ஸின் பெயர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளதும், அவர் மீது கொலை, கொலை முயற்சி, உட்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடத்தின் உடல் தகனம்!