தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் அதிகரிக்கும் போதைப்பொருள்; கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் உள்பட நால்வர் கைது!

நீலாங்கரை மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை: நீலாங்கரை மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 54.5 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலாங்கரை பகுதியில் போதைப்பொருள் வைத்திருப்பதாக, நீலாங்கரை காவல் நிலைய தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று (நவ.14) காலை அக்கரை, கிழக்கு கடற்கரை சாலை, சன்ரைஸ் அவென்யூ பேருந்து நிறுத்தம் அருகே சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த நபர்களிடம் நடத்திய சோதனையில், அவர்களிடம் போதைப்பொருள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் வைத்திருந்த தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த ரகு, திருவண்ணாமலை ஆரணியை சேர்ந்த கண்ணன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ஜொனாதன் (கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர்) ஆகிய 3 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து, 51 கிராம் மெத்தபெட்டமைன், 4 செல்போன்கள், ஒரு எடை இயந்திரம் மற்றும் ரூ.400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவையில் போதை காளான் விற்பனை.. ஐந்து பேர் கைது..!

இதேபோல், விருகம்பாக்கம் காவல் நிலைய தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று இரவு விருகம்பாக்கம், பள்ளிக்கூடம் முதல் தெருவில் உள்ள மார்க்கெட் அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அப்பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த அன்புகிரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரிடமிருந்தும் 3.5 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

நீலாங்கரை மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் இருந்து மொத்தமாக 54.5 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 நபர்களையும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போதப்பொருளை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தினந்தோறும் போதைப்பொருள் வைத்திருப்பது தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details