தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞரை வெட்டி சாய்ந்த மர்ம நபர்கள்.. பழிக்குப் பழி கொலையா? - திண்டுக்கல்லில் பயங்கரம்! - one person kill - ONE PERSON KILL

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில், பைக்கை வழிமறித்து ஒருவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற இரு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர், கோப்புப்படம்
கொலை செய்யப்பட்டவர், கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 1:23 PM IST

திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவருடைய மகன் முகமது இர்பான் (24). இவருடைய நண்பர்கள் பேகம்பூரைச் சேர்ந்த முகமது அப்துல்லா (25), முகமது மீரான் (23) ஆகிய 3 பேரும் ஸ்கூட்டரில் திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் இவர்களை வழிமறித்து பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஓடிவந்து முகமது இர்பானின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதைப்பார்த்த முகமது மீரான் அதிர்ச்சியில் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனை தடுத்த முகமது அப்துல்லாவுக்கும் தலையில் வெட்டு விழுந்துள்ளது.

படுகாயமடைந்த முகமது அப்துல்லா வலியால் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் ஆய்வாளர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து முகமது இர்பானின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்தில் கிடந்த முகமது இர்பான் ஓட்டி வந்த ஸ்கூட்டர், மர்ம நபர்கள் விட்டுச்சென்ற பட்டா கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மர்ம நபர்களை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட முகமது இர்பானும், முகமது அப்துல்லாவும் திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் 2வது, 8வது குற்றவாளிகள் என்பதும், இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

எனவே, பழிக்கு பழியாக இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முகமது அப்துல்லாவும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலையை சிதைத்து வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details