திருநெல்வேலி:நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் ஏழு நாட்களாகியும் தற்போது வரை போலீசாருக்கு துப்பு துலக்க முடியவில்லை. கடந்த மே 2ஆம் தேதி ஜெயக்குமார் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், 4ஆம் தேதி அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும், ஜெயக்குமாரின் கை கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டதோடு வயிற்றில் கடப்பாக்கல் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. முன்னதாக ஜெயக்குமார் எழுதியதாக வெளியான கடிதங்களில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.
எனவே, ஜெயக்குமார் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ ஜெயக்குமார் கொல்லப்பட்டாரா அல்லது கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
அதேநேரம், ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட விதத்தை வைத்து பார்க்கும் போது பெரும்பாலும் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். அடுத்த கட்டமாக, ஜெயக்குமாரின் உடற்கூறு ஆய்வில் அவர் கொலை செய்யப்பட்டதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இடம் பெற்றிருந்தது.
அதாவது, பெரும்பாலும் ஏற்கனவே உயிரிழந்த உடலை எரித்தால் மட்டுமே நுரையீரலில் திரவங்கள் தாங்காது. அந்த வகையில், ஜெயக்குமாரின் நுரையீரலிலும் திரவங்கள் தங்கவில்லை என கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியானது.
ஆனால், யார் கொலையாளிகள் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஜெயக்குமாரின் மரணத்திற்குப் பின்னால் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு மிகப்பெரிய சந்தேகம் இருந்து வருகிறது. ஜெயக்குமார் காணாமல் போனதாக அவரது மூத்த மகன் கருத்தையா ஜாப்ரின் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் தொடங்கி ஜெயக்குமார் சடலம் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது வரை ஜெயக்குமாரின் குடும்பத்தினர் மீது போலீசாரின் பார்வை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதாவது ஜெயக்குமார் காணாமல் போனதாக கூறப்படும் கடந்த மே 2ஆம் தேதி இரவு 10.45 மணி வரை ஜெயக்குமார் உயிரோடு நடமாடியதற்கான சிசிடிவி ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இரவு 10.30 மணி அளவில், ஜெயக்குமார் தனது ஊரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் டார்ச் லைட் வாங்கும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியானது.
அதில் அவர் இயல்பாகவே காணப்பட்டார். அதைத் தொடர்ந்து 10.45 மணியளவில் அந்த வழியாக அவரது கார் கடந்து செல்லும் வீடியோவும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. மேலும், ஜெயக்குமார் கார் அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஜெயக்குமார் வீட்டுக்குள் செல்லவில்லை என கூறப்படுகிறது. எனவே, காரை ஜெயக்குமார் தனது வீட்டில் நிறுத்திவிட்டு எங்கே சென்றார் என்பதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை.
ஒருவேளை மர்ம நபர்கள் அவர்கள் அவரை பின்தொடர்ந்து காரில் இருந்து இறங்கியதும் கடத்திச் சென்றார்களா என்ற கேள்வியும் போலீசாருக்கு எழுந்தது. அதேநேரம், ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட தோட்டம் அவரது வீட்டிற்குப் பின்னால் சுமார் 300 அடி தூரத்தில் மட்டுமே அமைந்துள்ளது.
எனவே தந்தையைக் காணவில்லை என்றதும், குறைந்தபட்சம் அருகில் உள்ள தோட்டத்தில் சென்று குடும்பத்தினர் தேடாமல் இருந்தது ஏன் என்ற கேள்வியும் போலீசாருக்கு எழுந்தது. மேலும், ஜெயக்குமார் எழுதியதாகக் கூறப்படும் கடிதங்களிலும் பல்வேறு சந்தேகங்கள் போலீசாருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.