கோயம்புத்தூர்:கோவையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் 63-வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. மேலும், இந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்று (பிப்.16) மாலை நிறைவடைந்ததை முன்னிட்டு, வெற்றி பெற்ற நபர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
இந்தப் போட்டியில் மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம், சென்னை பெருநகர காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு ஆகிய 9 அணிகளின் சார்பில் காவல்துறை வீரர்கள், வீராங்கனைகள் என மொத்தம் 743 பேர் கலந்து கொண்டனர்.
அதில் பொதுவான பிரிவு, அமைச்சுப் பணியாளர்கள் 30 வயதுக்கு உட்பட்டோர், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டோர், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டோர், 50 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர், படைவீரர் காவல் துறையினர் பிரிவில் 35 முதல் 39 வயதுக்கு உட்பட்டோர், 40 முதல் 44 வயதுக்கு உட்பட்டோர், 45 முதல் 49 வயதுக்கு உட்பட்டோர், 50 முதல் 54 வயதுக்கு உட்பட்டோர், 55 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
பொதுப் பிரிவினரில் ஆண்களுக்கு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் 1,500 மீட்டர் ஒட்டம், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும், பெண்களுக்கு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 1,500 மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. அதேபோல், வயது பிரிவுகள் வாரியாக ஓட்டப்பந்தயப் போட்டிகளும், குண்டு எறிதல் போட்டி அனைத்து பிரிவினருக்கும் நடத்தப்பட்டன.
பதக்கங்களை வழங்கிய பின் பேசிய சங்கர் ஜிவால், "தமிழ்நாடு காவல்துறையில் பணிகள் அதிகமாக இருப்பதால், விளையாட்டுக்கு போதிய பயிற்சி கிடைக்காமல் உள்ளது. ஆனால், இடைப்பட்ட நேரத்தில் காவலர்கள் விளையாட்டில் கலந்து கொண்டது மிகப்பெரிய விஷயம். இந்த விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனையை சிலர் படைத்துள்ளனர். அதாவது, 14 புதிய சாதனைகளில், 12 பெண்கள் சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.