தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எம்எல்ஏக்கள் உரிமையும், மரியாதையும் காக்கப்பட வேண்டும்" - சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் வந்த எம்எல்ஏ அருள்! - TN Assembly Session 2024

TN Assembly Session: நேற்று துவங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கருப்பு சட்டை அணிந்த வந்த பாமக சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், அமைச்சர்கள் எம்எல்ஏக்களை மதிக்க வேண்டும் எனவும், எம்எல்ஏக்களின் குறைந்தபட்ச உரிமையும், மரியாதையும் காக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாமக சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் புகைப்படம்
பாமக சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 11:15 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 20) துவங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் மற்றும் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் என அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், ஜூன் 21, 22, 24 ஆகிய தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீதான பேரவை விவாதம் நடைபெறும். இந்த பேரவைக் கூட்டம், காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் என இரு அமர்வுகளாக நடைபெறும்.

பாமக சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் வெளியிட்டுள்ள வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், நேற்று துவங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வந்த பாமக சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார். இது பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது தான் ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்தேன் என விளக்கம் அளித்து எம்எல்ஏ அருள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "அனைவரும் தன்னை ஏன் கருப்பு சட்டை வந்துள்ளீர்கள் எனக் கேட்டனர். இதற்கு 2 காரணங்கள் உள்ளது. முதல் காரணம், கடந்த வாரம் சட்டமன்ற அறிவிப்புக்குப் பிறகு, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், சட்டமன்ற உறுப்பினர்களை எந்த மந்திரிகளும் மதிப்பதில்லை. மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதில்லை என ஒரு கடிதம் எழுதியிருந்தேன். மேலும், என்னுடைய ஆதங்கத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த கருப்பு சட்டை அணிந்துள்ளேன்.

2வது காரணம், தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது கள்ளச்சாராயத்தால் ஏற்பட்டுள்ள மரணம் 50க்கும் மேல் எட்டும் என வேதனையான தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, எம்எல்ஏக்களின் குறைந்தபட்ச உரிமையும், மரியாதையும் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள சோக சம்பவத்திற்காகவும் தான் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு சென்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எம்எல்ஏ அருள் எழுதியிருந்த கடிதத்தில், "நான் கொடுத்த எந்த கோரிக்கையும் இதுநாள் வரை நடக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது நடந்ததா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். சில அமைச்சர்களிடம் தனிப்பட்ட முறையில் கொடுக்கும் பரிந்துரைக்கு, நேரடியாக யாருக்காகப் பரிந்துரைக்கிறோமோ அவர்களிடமே அமைச்சர்களது உதவியாளர்கள் நேரடியாக டீல் செய்து, எம்எல்ஏவான நம்மை அவமானப்படுத்திய நிகழ்வு மதுரையைச் சேர்ந்த பத்திரமானவர் உள்ளிட்ட பலரால் எனக்கு ஏற்பட்டது.

இன்னும் சில அமைச்சர்கள் நாம் கொடுக்கும் மனுவைத் தொட்டாலோ, படித்தாலோ தீட்டு என்பது போல் பாவிக்கும் விதம், பாடம் சொல்லும் அமைச்சர் உள்ளிட்ட சிலரிடம் எனக்கு ஏற்பட்டது. இதுவரை எனது தொகுதி சார்ந்தும், மக்களின் தனிப்பட்ட பிரச்சினைகள், தேவைகளுக்காகவும் ௧௦௦௦-க்கும் மேற்பட்ட மனுக்களை அமைச்சர்களிடம் நேரில் கொடுத்துள்ளேன். இதன் அனைத்து நகல்களும் என்னிடமுள்ளது.

அதில், 9 கோரிக்கைகள் நிறைவேற்றி மீதமுள்ள மனுக்கள் குப்பைக்குப் போய்விட்டனவா? அல்லது தனிப்பட்ட டீல்-க்காக காத்திருக்கிறதா? என்பது அமைச்சர்களுக்கே வெளிச்சம். கடந்த திமுக, அதிமுக இருகட்சி ஆட்சியிலும் அமைச்சர்களிடம் ஏதாவது பரிந்துரை கொடுத்தால், சபை நடக்கும் போது பேரவையில் நம்ம சீட்டில் ஒட்டிய கவரில் ஆர்டர் இருக்கும். செய்ய முடியவில்லை என்றால் தொலைப்பேசியில் கூப்பிட்டு, இது குறித்து அமைச்சர் விளக்கமா சொல்வார் என்றார்கள். ஆனால், இதுவரை ஒருநாள் கூட எனக்கு இந்த அனுபவம் இல்லை.

நமக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு இந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் செய்து கொடுத்தால் தானே மீண்டும் அவர்களது முகத்தில் முழிக்க முடியும். தேர்தலில் நாம் செய்த செலவுகள், அதனால், நமக்கு ஏற்பட்ட கடன்கள் குறித்து இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை. என் மனதில் இருக்கும் இதுபோன்ற பல வேதனைகள், பெரும்பாலானவை உங்களுக்கும் இருக்கும் என்பதை அறிவேன். அப்படி இல்லை என்றால் நீங்கள் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளராக இருப்பீர்கள்.

இக்கூட்டத்தொடரில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி, கூட்டணி இல்லா கட்சி என்ற பாகுபாடின்றி அனைத்து எம்எல்ஏக்களும் முதலமைச்சரிடம் முறையிட்டு, நமக்கு அமைச்சர்களால் ஏற்படும் புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் ஒன்றாகவோ, தனித்தனியாகவோ வாய்ப்பு கிடைக்கும் போது தனிமையிலோ, சபையிலோ முதலமைச்சர் செயலாளர்கள், உதவியாளர்கள் மூலமோ எடுத்துரையுங்கள்.

நேரில் சொல்ல முடியாவிட்டால் முதலமைச்சருக்கு கடிதமாவது கொடுங்கள். பேரவையில் உள்ள 234 எம்எல்ஏக்களும் மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்பதை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மூலமாக உணர்த்துவது அவசியம். மேலும், எம்எல்ஏக்களின் குறைந்தபட்ச உரிமையை, மரியாதையை காப்போம்" என எழுதியிருந்தார்.

இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று!

ABOUT THE AUTHOR

...view details