சென்னை: மதுராந்தகம் ஏரி சீரமைப்புப் பணிகள் தாமதமாவதால், வேளாண்மை மட்டுமின்றி குடிநீர் வழங்கலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வருவாய் இழப்பு: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; '' சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை. கன்னித்தீவு கதை போல நீளும் சீரமைப்புப் பணிகளால் கடந்த நான்காண்டுகளாக பயிர் சாகுபடி செய்யமுடியாமல் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இதுகுறித்த அக்கறையும், கவலையும் சிறிதும் இல்லாமல் ஏரி சீரமைப்புப் பணிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
2,908 ஏக்கர்:பொன்னியின் செல்வன் என்று போற்றப்பட்ட ராஜராஜ சோழனின் மூத்த சகோதரரான மதுராந்தகன் என்றழைக்கப்பட்ட உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மதுராந்தகம் ஏரியின் மொத்த பரப்பளவு 2,908 ஏக்கர் ஆகும். இதில் 2,231 ஏக்கர் பரப்பு நீர்த்தேக்கப் பகுதியாக உள்ளது. மதுராந்தகம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 694 மில்லியன் கன அடி ஆகும்.
ஆனால், பல ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாத நிலையில், கொள்ளளவு பாதியாக குறைந்து விட்டது. மழைக்காலத்தில் நிரம்பி வழியும் ஏரி, கோடைக்காலத்தில் வறண்டு விடும் அளவுக்கு கொள்ளளவு குறுகி விட்டது. இந்த நிலையை மாற்றி ஏரியை முழுமையாகத் தூர்வாரி, முழுக் கொள்ளளவை மீட்டெடுப்பதுடன், அதில் கிடைக்கும் மண்ணைக் கொண்டு கரைகளை வலுப்படுத்துவதன் மூலம் ஏரியின் கொள்ளளவை 791 மில்லியன் கன அடியாக அதிகரிப்பதற்கான திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்திற்காக 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டன.