சென்னை:2026-ஆம் ஆண்டு தான் தேர்தல் வரும் என்பதால் அப்போது ரூ.1000 வழங்கி மக்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது மக்களை முட்டாள்களாக்கும் செயல் எனவும், கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஓரளவுக்காவது பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2025-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது.
மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. 2009-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அத்துடன் ரூ.1000 முதல் ரூ.2500 வரை பணமும் சேர்த்து வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.1000 பணம் நிறுத்தப்பட்டதுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், பருப்பு வகைகள், கோதுமை, உப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்பட்டன.
அவை தரம் குறைந்தவையாக இருந்ததாகவும், அவற்றின் கொள்முதலில் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அந்தப் பொருட்களுக்குப் பதிலாக மீண்டும் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் ரூ.1000 நிறுத்தப்பட்டிருக்கிறது. இது சரியல்ல.