விழுப்புரம்:திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியாதாவது, "தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தக்கூடாது. ஒருவர் பெயரில் தனித்தனி மின் இணைப்புகள் இருந்தால், அதனை ஒன்றாக்கும் முயற்சியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ள நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இது அனைத்து மக்களையும் கடுமையாக பாதிக்கும். மின் இணைப்புடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்கும்போதே இந்த அச்சம் ஏற்பட்டது. பல மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். ஆண்டுதோறும் ஜூலையில் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். கடந்த ஆண்டு பாமக கடுமையாக எதிர்த்ததால் வீடுகளை தவிர்த்து, வணிக நிறுவனங்களுக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டது.
ரூ.31 ஆயிரத்து 500 கோடிக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இவ்வளவு உயர்த்தியும் மின்வாரிய நஷ்டம் குறையவில்லை. மின் வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத்தான் தடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல். 510 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவிக்கவேண்டும்.
பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம்: பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தின் மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளைப் பெற ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளது. கையூட்டு கொடுத்தால் சேவை கிடைப்பது அவமானமாகும். பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால் சேவைக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். இச்சட்டம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இச்சட்டம் நிறைவேற்றவேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை என்ன?
தமிழக முதல்வர்கள் ஒவ்வொருவரும் சாதனை படைத்து வரலாற்றில் இடம் பிடித்தார். ராஜாஜி சென்னை மாகாணத்தில் மது விலக்கை அறிமுகம் செய்தார் . அதனை ஓமந்தூரார் சென்னை மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தினார். காமராஜர் பாசன திட்டங்களையும், அண்ணா மும்மொழி திட்டத்தை ரத்து செய்து, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றினார்.
கருணாநிதி 3 வகையான இட ஒதுக்கீட்டையும், எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தையும், ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தையும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை 9வது அட்டவணையில் கொண்டுவந்தார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை. மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்கவேண்டும்.