சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி ''வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தினார். அப்போது இடைமறித்துப் பேசிய அமைச்சர் ரகுபதி, "கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொருளாதார நிலை குறித்த உரிய தரவுகளின்றி கடந்த ஆட்சியில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தான் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அதை ரத்து செய்தது" என்று கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: மேலும், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குழுவிற்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தமிழக அரசு வழங்கிவிட்டது என்றும், ஆனால் சமூக பொருளாதார நிலை குறித்த தரவுகளைப் பெற சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்றும் கூறினார்.
வன்னியர் இட ஒதுக்கீடு: அப்போது பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தினால் மட்டுமே மாநில அரசுகள் தனி இடஒதுக்கீட்டை வழங்க முடியும் என்றும், இல்லையென்றால் பிகார் மாநிலத்தில் வழங்கப்பட்ட உள் இடஒதுக்கீடுகளை நீதிமன்றம் ரத்து செய்ததைப் போல வன்னியர் இடஒதுக்கீடும் ரத்தாகிவிடும்" எனவும் கூறினார்.
அத்துடன், "பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக இக்கோரிக்கையை அவர்களிடம் வலியுறுத்த வேண்டும் எனவும், மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அதற்கு ஜி.கே. மணி ஆதரவு அளிக்க வேண்டும்" எனவும் முதல்வர் கூறினார்.
ஜி.கே.மணி வாதம்: ஆனால், முதல்வரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, "அருந்ததியருக்கு வழங்கப்பட்டது போல வன்னியர்களுக்கும் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு" என்று வாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக தற்போது பாமக வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பேசுகின்றது என்றும் வன்னியர்களுக்காக திமுக பலவற்றை செய்துள்ளது" எனவும் குறிப்பிட்டார் .
மேலும், "இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய வன்னியர்களை அதிமுக சுட்டுக் கொன்றது என்றும் , தற்போது திமுக அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுகிறது" எனவும் அமைச்சர் கூறினார். மேலும், "ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீடு மூலம் வன்னியர்கள் அரசு பணிகளில் அதிகளவில் இருக்கும் நிலையில் 10.5% கொடுக்கப்பட்டால் வன்னியர்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிடும்" என்றும் கூறினார்.