தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பாமகவை கொச்சைப்படுத்துவதை திருமாவளவன் நிறுத்த வேண்டும்”.. அன்புமணி ராமதாஸ்! - Anbumani Ramadoss

பாமக சாதிக்கட்சி என்று இழிவுபடுத்த வேண்டாம், அப்படியென்றால் நீங்கள் என்ன கட்சி? எங்கள் கட்சியை கொச்சைப்படுத்துவதை திருமாவளவன் நிறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

திருமாவளவன் , அன்புமணி ராமதாஸ்
திருமாவளவன் , அன்புமணி ராமதாஸ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 9:27 PM IST

தூத்துக்குடி:கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “தென் மாவட்டங்களில் சரியான முறையில் வேலை வாய்ப்புகள் இல்லை. சாதி மோதல்கள், சண்டைகள் அதிகளவு இந்தப் பகுதியில் இருந்து வருகிறது. கல்வியில் முதல் 10 இடத்தை தென் மாவட்டங்கள் பிடித்துள்ளன. ஆனால், அதற்கேற்ப வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று, வெறும் ரூ.7 ஆயிரத்து 500 கோடிக்கு மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வந்துள்ளார். அது முதலீடு கிடையாது, புரிந்துணர்வு ஒப்பந்தம். தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று முடிந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதலீடு என்பது ரூ.87 ஆயிரம் கோடி மட்டும் தான், இது வெறும் 9 சதவீதம் தான்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வி:தற்போது முதலமைச்சர் அமெரிக்காவுக்குச் சென்று மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 10 சதவீதம் மட்டும் தான் முதலீடாக வரும். வெறும் ரூ.750 கோடி தான் முதலீடாக வரும். இந்த பயணத்தை நான் தோல்வியாக பார்க்கிறேன். மற்ற மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றால் ரூ.50 ஆயிரம் கோடி, ரூ.80 ஆயிரம் கோடி என வாங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க:"மது ஒழிப்பில் விசிக LKG; பாமக PhD" -அன்புமணியின் விமர்சனத்துக்கு திருமாவின் பதில் என்ன?

காவிரி குண்டாறு திட்டம்:மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி குண்டாறு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வைகை - குண்டாறில் இணைக்க வேண்டும். தாமிரபரணி, நம்பியாறு, கோதையாறு, பச்சையாறு, எலுமிச்சையாறு திட்டம் தொடர்ந்து இழுபறியில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கை பேரிடர் வெள்ளத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் மோசமாக உள்ளன.

மது ஒழிப்பு: மது ஒழிப்பு என்று சொன்னாலே தமிழ்நாட்டு அரசியலில் ஒரே கட்சி பாமக தான். தமிழ்நாட்டில் இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாத ஒரு சூழலுக்கு கொண்டு வருவது தான் திராவிட மாடல். கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது ஒழிப்புக்காக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மதுவை எதிர்த்துப் போராடி பாமகவில் இதுவரை 15 ஆயிரம் பெண்கள் சிறை சென்றுள்ளனர். திமுக, அதிமுக, தேமுதிக, திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மது ஒழிப்பை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் பாமக.

கட்சியை கொச்சைப்படுத்த வேண்டாம்:மது ஒழிப்பு மாநாடு, போராட்டம், மாநாடு திருமாவளவன் நடத்தினாலும் சரி, யார் நடத்தினாலும் சரி நாங்கள் ஆதரிப்போம். இது எங்கள் கட்சியின் மையக்கொள்கை. ஆனால், பாமக சாதி கட்சி என்று இழிவுபடுத்த வேண்டாம். அப்படியென்றால் நீங்கள் என்ன கட்சி? எங்கள் கட்சியைக் கொச்சைப்படுத்துவதை திருமாவளவன் நிறுத்த வேண்டும்.

2026 தேர்தல்: 2026 தேர்தலில் மட்டுமல்ல, அடுத்து வரும் தேர்தலிலும் தமிழ்நாட்டில் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான் அமையும். 2026இல் மீண்டும் திமுக ஆட்சி வராது. திமுக மீது மக்கள் எதிர்ப்பு உள்ளது. முதலமைச்சர் ஏதோ விளம்பரம் செய்து கொண்டுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மது, கஞ்சா, போதைப் பொருட்கள், பாலியல் வன்கொடுமை என இவற்றில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details