சென்னை:தமிழகத்தில் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படும் மணல் குவாரிகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெள்யிட்டுள்ள அறிக்கையில்,"தமிழகத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் கடந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்டன. அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்து மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
அதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அதைப் பொருட்படுத்தாத தமிழக அரசு, கடந்த ஆண்டு மே மாதத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 26 மணல் குவாரிகளைத் திறந்தது. அதன் பின்னர், 3 மாதங்கள் கழித்து 10 மணல் குவாரிகளை திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால், மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய ஆய்வு, மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அனைத்து மணல் குவாரிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டன. இந்நிலையில் மூடப்பட்ட குவாரிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்காக தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளே இருக்கக்கூடாது என்பது தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் விருப்பம். மணல் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் மணல் குவாரிகளுக்கு நிரந்தரமாக தடை விதித்துள்ளன. ஆனால், அதற்கு மாறாக மூடப்பட்ட குவாரிகளில் 26 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கத் துடிப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது.
பன்மடங்கு அள்ளப்பட்ட மணல்: கடந்த ஆண்டு மணல் குவாரிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட போது, அவற்றிலிருந்து 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுப்பதற்கு மட்டுமே அரசு அனுமதி அளித்தது. இந்த அளவு மணலை வெட்டி எடுக்க பல ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்த சில மாதங்களில் மணல் குவாரிகளை ஆய்வு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், அந்த மணல் குவாரிகளில் இருந்து 27.70 லட்சம் அலகுகள் மணல் அள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகமானதாகும்.