சென்னை: ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி பா.ம.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த போது ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி அனுமதி மறுத்த காவல்துறை, ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்த உடனடியாக அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டி பாமக கொள்கை பரப்புச் செயலாளர் சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சியினருக்கு அனுமதி வழங்க மறுக்கும் காவல்துறையினர், எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விண்ணப்பம் பெறாமலே ஆளுங்கட்சியினர் போராட்டத்திற்கு மட்டும் அனுமதித்துள்ளனர்.
போராட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சென்னை மாநகர காவல்துறை சட்ட விதியை மீறி செயல்பட்ட சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உள்துறைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் நாளை (ஜன 08) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.