திண்டுக்கல்: திண்டுக்கல் பாராளுமன்ற பாமக வேட்பாளர் திலகபாமா இன்று (ஏப்.06) பழனி பகுதியில், பக்தர்களுக்குப் பஞ்சாமிர்தம் விற்பனை செய்தும், குதிரை வண்டி இயக்கியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் வேட்பாளர் திலகபாமா, தேர்தலில் போட்டியிட உள்ளார். இவர் இன்று (ஏப்.06) காலை முதல் பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவர் சிலை, பேருந்து நிலையம், பாலசமுத்திரம், பாப்பம் பட்டி, நெய்காரபட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அவர் அங்குக் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் அவர் பேசுகையில், “மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்தை, திமுக அரசு கலைஞர் காப்பீட்டு திட்டம் என மாற்றி வருகிறது. சாராயக்கடையை திறக்க முயற்சிப்பவர்களை துரத்தி விட வேண்டும். பழனி அடிவாரப் பகுதியில் கிரிவலப் பாதையில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டதால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வியாபாரிகளுக்கு எந்த ஒரு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை”, என குற்றம் சாட்டினார்.