மயிலாடுதுறை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ம க ஸ்டாலின் மயிலாடுதுறை: நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் (NDA) சார்பில், பாமக வேட்பாளராக ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர், இன்று (திங்கட்கிழமை) மயிலாடுதுறையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, மயிலாடுதுறையில் தமிழ் மாநில காங்கிரஸ், ஐ.ஜே.கே கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தன்னை வெற்றிபெறச் செய்ய களப்பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் மூன்று தொகுதிகளை ஒன்றிணைத்து நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மயிலாடுதுறை, நவகிரக ஸ்தலங்களில் மையப்பகுதியாக உள்ளது. ஆனால், இங்கு பல்வேறு குறைகள் உள்ளன.
கும்பகோணத்திற்கு ரூ.110 கோடி மதிப்பீட்டில் ரயில்வே திட்டங்களை பிரமர் மோடி கொண்டுவந்துள்ளார். மயிலாடுதுறையில் உள்ள குறைகளை, பிரதமர் மோடி மீண்டும் பதவிக்கு வந்தவுடன் சரி செய்வார். பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படாமல் உள்ளதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன். பாமகவை வேடந்தாங்கள் பறவை என விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கோடைகாலத்தில் பிதற்றிகொண்டு இருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சராக இருக்கும் பழனிச்சாமி இப்படி பேசக்சடாது. அவர் அடிக்கடி நீர்மோர், தர்பூசணி பழம் சாப்பிட்டு உடலை குளிர்ச்சிப் படுத்திக்கொள்ள வேண்டும். 1998 மற்றும் 1999ஆம் ஆண்டு, பாஜவுடன் பாமக கூட்டணி அமைத்து, வாஜ்பாயை பிரதமராக்கி அழகுபார்த்தது. 2014, 2019, 2024 தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தான், பாமக இருந்து வருகிறது.
மத்தியில் பாஜகவுடன், அன்றிலிருந்து இன்றுவரை பல ஆண்டுகளாக கூட்டணி அமைத்து வருகிறோம். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இன்னும் 10 நாட்களில் மயிலாடுதுறை தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக வருவார். இதேபோல் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்காக வருகிறார்கள். இட ஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து 44 ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டு போராடி வருகிறார்" என்றார்.
இதையும் படிங்க:தென்காசியில் திமுக Vs பாஜக இடையே தான் போட்டி: ஜான் பாண்டியன் கூறியது என்ன? - Tenkasi Candidate John Pandian