மதுரை: மதுரையில் நடைபெறும் 72வது நாடார் மகாஜன சங்க மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்ற பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "சமீபத்தில் தமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் நிலவி வருகிறது.
காவிரி குறுக்கே மேகதாதையும், முல்லைப் பெரியாறு அணையில் அதற்கு நிகராக புதிய அணையை கட்டுவோம் என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டிக்கத்தக்கது. இப்போது இருக்கும் அணை வலிமையாக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட குழு ஐந்து முறை உறுதி அளித்துள்ளது.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது என்பதை பார்க்கும்போது வேண்டுமென்றே கர்நாடகா அரசு தமிழகத்திடம் மோதி கொண்டிருக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் விரைந்து உரிய தீர்வு காண வேண்டும். அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என தேர்தல் வாக்குதியில் அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பின்பு இப்போது வரை மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், ஒரு சின்ன நடவடிக்கை கூட எடுக்கவில்லை.
ஜாதி வாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, மற்ற மாநிலங்கள் அதனை நடைமுறைப்படுத்தி நலத்திட்டங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாடு அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கலாம். காரணம், ஒரு பக்கம் மது, மற்றொரு பக்கம் கஞ்சா. கடந்த மூன்று ஆண்டு காலமாக போதை பொருள் பயன்பாடு 100 மடங்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் என்ன கிடைக்கிறதோ, அத்தனை போதை பொருளும் தமிழ்நாட்டில் சரளமாக கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் கஞ்சா போதைப்பொருளின் தலைநகரமாக இயங்கிவருகிறது திருவண்ணாமலை மாவட்டம். அங்கே எங்கு பார்த்தாலும் கஞ்சா. அங்கிருக்கும் அமைச்சர் எ.வ.வேலு அதை கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் கஞ்சா போதையினால் எல்லா பகுதிகளிலும் வழப்பறி, கொலை சம்பவம் நடக்கிறது. முதலமைச்சர் அதில் கவனம் செலுத்த வேண்டும். திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து கெடுத்து தலைமுறையை நாசப்படுத்தி விட்டார்கள். மருந்தகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.