தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆசிரியர்களை விற்பனை செய்யும் பள்ளிக்கல்வித்துறை" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், விடுதி காப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2024, 11:56 AM IST

சென்னை:பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் ஆசிரியர்களையும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய கல்வித்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றில் பணியாற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.

அதாவது பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு விடுதிக் காப்பாளர் பணி செய்வதற்காக விற்பனை செய்ய இருப்பதாகவும், அதற்கு தயாராக இருப்போர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு செல்லலாம் என்றும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இது தவறு. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளில் காப்பாளர் பணியிடங்கள் காலியாக இருந்தால், அதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை முறையான அமைப்பின் மூலம் வெளியிட்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் முறையாகும்.

பட்டதாரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்!

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை விடுதி காப்பாளர்களாக இன்னொரு துறைக்கு அனுப்புவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கும் நிலையில், 497 ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்பினால் பள்ளிக்கல்வித்துறையில் கற்பித்தல் பணிகள் முற்றிலுமாக முடங்கி விடும். அது விரும்பத்தக்கதல்ல.

பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் அவரது கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் உள்ள விடுதிகளுக்கு அனுப்ப துடிப்பதற்கு காரணம் 497 ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மிச்சம் செய்யலாம் என்பது தான். கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு, ஆசிரியர்களை பிற துறைகளுக்கு அனுப்பத் துணிந்திருப்பது பெரும் அவமானம் ஆகும்.

தமிழக அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்கள் 2,768 பேரையும், பட்டதாரி ஆசிரியர்கள் 3,192 பேரையும் தேர்ந்தெடுக்க பல மாதங்களுக்கு முன் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு போட்டித் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், நிதி நெருக்கடி காரணமான அவர்களின் நியமனத்தை தாமதப்படுத்தும் வகையில் ஆள்தேர்வு நடவடிக்கைகள் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

இப்போது, அடுத்தக்கட்டமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களை அடுத்த துறைக்கு அனுப்பும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. அடுத்தக்கட்டமாக பள்ளிக்கூடங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதற்குக் கூட திராவிட மாடல் அரசு தயங்காது என்று தான் தோன்றுகிறது. மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசின் முதல் செலவுக்கு கல்விக்கானதாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், விளம்பரத்தை மட்டுமே நம்பி நடத்தப்படும் திராவிட மாடல் ஆட்சியில் பயனற்றத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக பள்ளிக்கல்வித்துறையின் நலன்கள் பலி கொடுக்கப்படுகின்றன. இந்த அநீதியை அனுமதிக்கவே கூடாது.

ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து விரைவில் விசாரிக்க உத்தரவு; நீதிமன்றத்தில் அரசு தகவல்!

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் (GSDP) கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 3 மடங்காக உயர்த்தப்படும்" என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதி பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2030ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.84 லட்சம் கோடியாக (One Trillion US Dollars) இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

நிதி ஒதுக்கீட்டின் அளவு 3 மடங்கு அதிகரிக்கப்படும் என்றால் 2030ஆம் ஆண்டில் கல்விக்கான ஒதுக்கீடு ஒட்டுமொத்த உள்நாட்டு மதிப்பில் 4.95% அதாவது ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் கோடியாக இருக்க வேண்டும். அதையே நடப்பாண்டுக்கு கணக்கிட்டால் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.1,56,271 கோடியாக இருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் கல்விக்கு ரூ.44 ஆயிரம் கோடி மட்டுமே உள்ளது. இது திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு ஆகும்.

அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இப்போது அது 1.39% ஆக குறைந்துவிட்டது. பள்ளிக்கல்வித்துறையின் சீரழிவுகளுக்கு அத்துறைக்கு அரசு போதிய நிதி ஒதுக்காததே காரணமாகும். கல்வி வளராமல் எந்த மாநிலமும், நாடும் வளர முடியாது. இதை உணர்ந்து கொண்டு கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதன் ஒரு கட்டமாக விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவைக் கைவிட வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details