தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர் இட ஒதுக்கீடு; 'தமிழக அரசு இப்படியான நாடகங்களை நடத்துவது நியாயமா?' - பாமக பாலு கேள்வி - PMK Reservation issue

rti on vanniyar reservation: வன்னியர் இடஒதுக்கீடு குறித்து தவறான தரவுகளைக் காட்டி மக்களை ஏமாற்றக் கூடாது என்று தமிழக அரசை பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான க.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.

க.பாலு (கோப்புப்படம்)
க.பாலு (கோப்புப்படம்) (credit - க.பாலு எக்ஸ் தள பக்கம்)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 7:17 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான் என்று பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான க.பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; 'சென்னையைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சில வினாக்களை எழுப்பியதாக கூறியுள்ள தமிழக அரசு, அதற்கான பதில்களாக சில புள்ளிவிவரங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரித்து விட்டது என்று காட்ட முயல்கிறது. சமூகநீதி குறித்து அறிந்த வழக்கறிஞர் என்ற முறையில், அரசு வெளியிட்ட தரவுகளை ஆய்வு செய்தாலே இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

1. தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி எழுப்பப்படும் வினாக்களுக்கு ஒரு மாதத்திற்குள் விடை அளிக்கப்பட வேண்டும். ஆனால், 27.10.2023ஆம் தேதி கேட்கப்பட்டு 10 மாதங்களாக கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த வினாக்களுக்கு அரசு இப்போது திடீரென விடையளித்திருக்கிறது.

2. தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பல வினாக்களும், துணை வினாக்களும் எழுப்பப் பட்டுள்ளன. அவற்றில்18 வினாக்களுகு விடையளிக்கப்பட்டுள்ளது. 17 வினாக்களில் தேர்வு வாரியான இட ஒதுக்கீட்டு விவரங்கள் கோரப்பட்டிருக்கும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 பணிகள் குறித்த வினாவுக்கு மட்டும் 1.9.2023ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் எவ்வளவு துணை ஆட்சியர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் வன்னியர்கள் எத்தனை விழுக்காடு என வினா எழுப்பப்பட்டுள்ளது. தேர்வு வாரியாக பார்த்தால் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது அம்பலமாகி விடுய் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காக மொத்த எண்ணிக்கை கோரப் பட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது அரசே பினாமி பெயரில் அவர்களுக்கு வசதியாக வினாக்களை எழுப்பி விடைகளை அளித்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

3. முதல் வினாவே கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சமூக வாரியான புள்ளிவிவரங்கள் வேண்டும் என்பது தான். ஆனால், 2018 முதல் ஐந்தாண்டுகளுக்கான விவரங்களை மட்டுமே வெளியிட்டு வன்னியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து விட்டதாக கூறுகிறது. 2018 க்கு முன்பாக வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதாலேயே அந்த விவரங்களை தமிழக அரசு மறைக்கிறது.

4. பெரும்பான்மையான வினாக்களில் பத்தாண்டுகளுக்கான விவரங்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் குறித்த பத்தாவது வினாவில் மட்டும் 2021ஆம் ஆண்டுக்கான விவரம் மட்டுமே கோரப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப வினாக்கள் தயாரிக்கப் பட்டுள்ளன என்பதை இது உறுதி செய்கிறது.

5. டி.என்.பி.எஸ்,சி குரூப் 4 பணிகள், காவல் உதவி ஆய்வாளர் பணிகள் குறித்த இரு வினாக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? என்று கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்று கூறியுள்ள தமிழக அரசு, மொத்தமுள்ள பணியிடங்களில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 10.50%க்கும் கூடுதலாக உள்ளது என்ற திரிக்கப்பட்ட பதிலை தெரிவித்திருக்கிறது.

6. டி.என்.பி.எஸ்.சி குரூப் 3 பணிகளுக்கு 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. இட ஒதுக்கீட்டு விதிகளின்படி மொத்தமுள்ள 17 இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும். ஆனால், 7 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக அரசு கூறியிருப்பதிலிருந்தே தரவுகள் தவறு என்பது உறுதியாகிறது.

7. 2010ஆம் ஆண்டு நிலவரப்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, 2, 3, 4 ஆகிய பணிகளுக்கு ஆண்டு வாரியாக தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் விவரம், அதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்கள் கோரப்பட்டிருக்கின்றன. ஆனால், இது குறித்த விவரங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் இல்லை என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. இதன்மூலம் 2010&ஆம் ஆண்டுக்கு முன்பாக வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதும், அதனால் தான் இந்த விவரங்களை வெளியிடாமல் அரசு மறைக்கிறது என்பதும் உறுதியாகிறது.

8. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தரவுகளை வெளியிட்டது அனைத்தும் திட்டமிட்ட நாடகம்; சில ஊடகவியலாளர்களை இதற்காக அரசே பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கு இன்னும் ஓர் சான்றையும் என்னால் கூற முடியும். டி.டி நெக்ஸ்ட் இதழில் நேற்று வெளியான செய்திக்கு அடிப்படையான தகவல் பெறும் சட்டப்படியான புள்ளிவிவரங்களை தமிழக அரசே பிரைவேட் நியூஸ் என்ற பெயரில் அனைத்து ஊடகங்களும் அனுப்பி வெளியிடும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.

சமூகநீதியைக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, இப்படியான நாடகங்களை நடத்துவது நியாயமா? இது தான் சமூகநீதி விடியலா? என்பதை தமிழக அரசு தான் விளக்க வேண்டும்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் க.பாலு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அது திரிக்கப்பட்ட தரவு தான்”.. 10.5% இடஒதுக்கீடு RTI விவரத்திற்கு ராமதாஸ் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details