விழுப்புரம்:விக்கிரவாண்டி தொகுதி, கோலியனுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், திமுக கிளை செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பரிசாக வழங்குவதற்காக புடவைகளை பதுக்கி வைத்திருப்பதாக தொகுதி தேர்தல் அலுவலருக்கு புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று, தேர்தல்நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் இளையராஜா தலைமையில் தேர்தல் அதிகாரிகள் ராமலிங்கம் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த புடவைகள், வேட்டி, சட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையறிந்த பாமக நிர்வாகிகள், ஆசாரங்குப்பம் கிராமத்தில் சில வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புடவைகள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து தெருவில் போட்டு கோஷம் எழுப்பினர். மேலும் இதுகுறித்து, பாமக செய்தி தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞர் பாலு, சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் கட்சியினர், மாவட்ட ஆட்சியர் பழனியை சந்தித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.
பின்னர் விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக செய்தி தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞர் பாலு கூறியதாவது, "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் திமுகவின் அராஜகம் தலைவிரித்து ஆடுவதாகவும், காவல் துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டை மீறி நிலைமை மோசமாக போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து பலமுறை தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.