கன்னியாகுமரி: 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் பிரசாரம் நேற்றுடன் (மே.30) ஓய்ந்த நிலையில், நாளை (ஜூன்.1) இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், 3 நாள் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்துள்ளார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் ஜூன் 1ஆம் தேதி வரை ஏறத்தாழ 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுகிறார்.
முன்னதாக நேற்று (மே.30) கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்த பிரதமர் மோடி, விவேகானந்தர் பாறையில் தனது முதல் நாள் தியானத்தை தொடங்கினார். தொடர்ந்து இன்று (மே.31) இரண்டாவது நாளாக அவர் தியானத்தைத் தொடர்ந்து வருகிறார். காலையில் விவேகானந்தர் பாறையில் இருந்த வாறு பிரதமர் மோடி சூரிய உதயத்தை கண்டு தரிசித்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி காவி உடை அணிந்து மீண்டும் விவேகானந்தர் பாறையில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் வரை பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட உள்ளார். பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டுள்ளது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.
நெற்றியில் விபூதி பட்டை குங்குமமிட்டு, கையில் ருத்ராட்ச மாலையை வைத்தபடி கைகூப்பி வணங்கியவாறு பிரதமர் மோடி அமர்ந்து தியானம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தியானம் செய்வதை அடுத்து கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவேகானந்தர் மண்டபம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் கன்னியாகுமரியிலும், விவேகானந்தர் மண்டபத்திலும் முகாமிட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாக சுவாமி விவேகானந்தர் இந்த பாறையில் அமர்ந்து மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்து புராணத்தில் பார்வதி தேவியும் இந்த பாறையில் தியானத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன் ஆன்மீக பயணத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு உள்ள பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு கேதர்நாத்திலும், அதற்கு முன் கடந்த 2014ஆம் ஆண்டு சிவாஜி பிரதாப்கர்க்கிலும் தியானத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் நாளை (ஜூன்.1) உத்தர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல"- ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்! - VK Pandian