வேலூர்:வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள நடிகையும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு வேலூர் வருகை தந்தார்.
பிரச்சாரத்திற்கு முன்னதாக, நடிகை குஷ்புவும் ஏ.சி சண்முகமும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “கச்சத்தீவைக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தாரைவாக்கப்பட்டது. அப்போது திமுகவும் உடந்தையாக இருந்துள்ளது. அப்பொழுது எம்ஜிஆர் இதனை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டத்தையும் நடத்தினார். எனவே கச்சத்தீவு பிரச்சனையில் திமுகவுக்கும் பங்கு உண்டு.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வரும்போது கச்சத்தீவு பிரச்சனை நல்லமுடிவு காணப்பட்டு இந்தியாவுக்குச் சொந்தமாக நடவடிக்கை எடுப்பார். கடந்த 50 ஆண்டுகாலமாக இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தமிழக மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தனர்” என்றனர்.
கச்சத்தீவு பிரச்சனையில் பாஜக கடந்த 10 ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அதிக அளவில் யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு சில படகுகள் பிடிக்கப்பட்டு அது மத்திய அரசின் நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
மேலும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் மற்றும் கியூட் தேர்வுகள் ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, "நீட் தேர்வைக் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாகத்தான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வானது மாநிலங்களிலிருந்து எடுக்க முடியாது.
இதை எந்த மாநிலமும் நீக்க முடியாது என நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் கூறி இருந்தார். எந்த காங்கிரஸ் கட்சியினரும் கேள்வி கேட்கவில்லை. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் நேரத்தில் எதைச் சொன்னாலும் பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என அவர்கள் மக்களிடையே பொய்களைக் கூறி வருகின்றனர்.
மக்களைத் திசை திருப்பப் பார்க்கின்றனர் அது முடியாது. 2047ம் ஆண்டு இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்பதில் ஐயமில்லை. அதற்கான திட்டங்களை வகுத்துத்தான் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். எந்த ஒரு மாநிலமும் பின்தங்கி விடக்கூடாது என்பதற்காக மோடி இந்தியாவின் வளர்ச்சியை முன் நிறுத்திப் பல திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் இன்று இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு இரண்டு லட்சத்து 75 ஆயிரம் கோடி நிதியினை வழங்கி உள்ளது" என்றனர். மேலும், பிரதமர் மோடி வருகிற 10ம் தேதி காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் எனவும், வேலூரில் பிரதமரில் ரோடு ஷோ இல்லை என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளில் ரூ.4 இலட்சம் கோடி; கடன் பெறுவதில் தான் தமிழகம் முதலிடம் - நடிகை குஷ்பூ சாடல்! - Lok Sabha Election 2024