மதுரை: மதுரையில் இன்று (பிப்.27) நடைபெற்ற 'வாகனத் தொழிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குதல் – டிஜிட்டல் இயக்கம்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, வாகனத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, "தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக வாகனத் துறையில், உலக அரங்கில் தமிழ்நாடு தனது திறமையை நிரூபித்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம், மோட்டார் வாகனத் தொழிலிலிருந்து வருகிறது. இது நாட்டின் தற்சார்பில் முக்கிய அங்கமாக உள்ளது.
மோட்டார் வாகனத் தொழிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 லட்சத்துக்கும் அதிகமான கார்கள், 2 கோடி இருசக்கர வாகனங்கள், 10 லட்சம் வர்த்தக வாகனங்கள் மற்றும் 8.5 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு வாகனத்திலும் பயன்படுத்தப்படும் 3000 முதல் 4000 பாகங்களின் உற்பத்தி செயல்பாட்டில், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாகங்களின் உற்பத்திக்கு இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் இந்த நிறுவனங்கள் உள்ளது.
இன்று நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் வலுவான அங்கமாக மாறுவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு, தரம் மற்றும் நீடித்த உழைப்பு அவசியம். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உள்ளடக்கிய வகையில் 'குறைபாடு இல்லாத உற்பத்திப் பொருட்கள்' என்பது நமது கொள்கையாக இருக்க வேண்டும்.