திருநெல்வேலி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் விதத்தில் போராட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்களை கையில் பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உதவித்தொகை கேட்டு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் காலதாமதம் என்று உடனடியாக உதவித்தொகை வழங்கிடக் கோரியும், உதவித்தொகையை 5 ஆயிரம் ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட தலைவர் பெருமாள் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைக்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தவர்கள் முதல் பலர் காத்து இருக்கின்றனர்.
அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் தாமதமாகிறது. உடனடியாக அவர்களுக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றனர். அரசாணை 52-ன் படி அவர்களுக்கு 100 நாள் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும்.