கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர்.மூர்த்தி பட்டமளிப்பு விழாவின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியையும், பார்க்கும் வேலையையும் ஆர்வத்துடன் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். 'விக்சித் பாரத்' எனும் இலக்கை அடைய புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு கல்வி நிறுவனங்களின் சார்பில் உரிய ஊக்கங்கள் வழங்கப்பட வேண்டும். தேசத்தின் வளர்ச்சிக்கு அறிவியல், பொறியியல் என அனைத்து துறைகளின் வளர்ச்சியும் அவசியமானதாகும். தேசமே முதன்மை என்ற எண்ணத்தை பெற்றோர்கள் விதைக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சியே முதன்மையானது என்பதை இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் 1,622 முனைவர் பட்ட ஆய்வாளர்களும், முதுகலை மற்றும் இளநிலைப் பட்டங்களில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 298 மாணவர்களும் பட்டங்களை, தங்கப் பதக்கங்களை நேரடியாக பெற்றனர். இப்பட்டமளிப்பு விழாவின் வாயிலாக 1,17,233 இளநிலை பட்டப்படிப்பு, 42,312 முதுகலை பட்டப்படிப்பு, 279 இளமுனைவர், 1,172 முதுகலை பட்டயப்படிப்பு என மொத்தம் 1,62,618 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றபோது புகார் மனு அளித்தார். இதனால், விழா மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அவர்களிடம் மனு கொடுத்தற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் புகார் கொடுத்து உள்ளேன்.
இதையும் படிங்க :திருவள்ளூர் பல்கலை. 19வது பட்டமளிப்பு விழா.. 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம்!