தூத்துக்குடி:கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டி(45). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவர், சில நபர்களிடம் கந்து வட்டிக்குப் பணம் கடனாகப் பெற்று மாதம் மாதம் வட்டி செலுத்தி வந்துள்ளார். அது மட்டுமின்றி, நிலம் தொடர்பாக கொடுத்த பைனான்ஸ் தொகையும் வராமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் ஆறுமுகப்பாண்டி கொடுத்த இடங்களில் பணம் வரவில்லை என்பதால் வட்டி கொடுக்க முடியாமல் பரிதவித்துள்ளார்.
மேலும், தான் வாங்கிய அசல் பணத்திற்கு மேலாக வட்டி கொடுத்து இருந்த போதிலும் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். தனக்குக் காலஅவகாசம் கொடுங்கள் பணத்தினை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று ஆறுமுகப்பாண்டி எவ்வளவு சொல்லியும் கேட்காத கந்து வட்டிக் கும்பல் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்து வந்ததாக தெரியவருகிறது. இதனால், கந்து வட்டி பிரச்னை தொடர்பாக கடந்த 28.08.23 மற்றும் 25.01.2024 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஆறுமுகப்பாண்டி புகாரளித்துள்ளார்.
ஆனால், காவல் துறையினர் கந்துவட்டி கும்பல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கட்ட பஞ்சாயத்துப் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் கந்து வட்டிக் கும்பலின் தொல்லை தாங்க முடியாமல் ஆறுமுகப்பாண்டி கடந்த 25ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றநிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குச் சிகிச்சைப் பலனின்றி கடந்த 27 ஆம் தேதி ஆறுமுகப்பாண்டி உயிரிழந்தார்.
காவல் துறையின் அலட்சியப் போக்கு காரணமாகவும், கந்துவட்டி கேட்டு கும்பல் மிரட்டியதால் தான், ஆறுமுகப்பாண்டி தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறி, கந்துவட்டி கேட்டு மிரட்டியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களிடம் உள்ள ஆவணங்களை மீட்டுத் தர வலியுறுத்தியும் ஆறுமுகப்பாண்டியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.