தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆடை கட்டுப்பாடை மீறுவது சட்டவிரோதம்'.. உதயநிதிக்கு எதிராக மேலும் ஒரு மனு..!

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிகளை வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
உதயநிதி ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 2:22 PM IST

சென்னை: சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி. பிரவீன் சமாதானம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், திமுக கொடி மற்றும் சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ளார்.

நடுநிலையாக செயல்பட வேண்டிய துணை முதலமைச்சர் கட்சி சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது, கட்சி சார்பில் வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும், கட்சிக்காக மறைமுகமாக வாக்காளர்களை ஈர்ப்பதாகவும் கருதப்படும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஆடை கட்டுப்பாடு விதிகள் 2019 வகுக்கப்பட்டுள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதை அரசு ஊழியராக பின்பற்றாதது சட்ட விரோதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ராணுவ கிராமத்தின் பார்வையில் ‘அமரன்’.. என்ன சொல்கிறார்கள் வீரர்கள்?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் டி சர்ட் அணிய இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டு விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆடை கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிடக்கோரி சத்யகுமார் என்பவரால் தொடரப்பட்ட வழக்கில், அரசு அதிகாரிகளுக்கான ஆடைக்கட்டுபாட்டு விதி அமைச்சர்களுக்கு பொருந்துமா? என தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக உதயநிதி ஸ்டாலினின் டி-சர்ட் குறித்து விமர்சித்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கட்சி நிகழ்வுகளில் எப்படி வேணாலும் அணிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு அரசு நிகழ்ச்சியில் திமுக கொடியுடன் சென்றது ஏற்புடையதல்ல. உதயநிதியிடம் சட்டை இல்லை என்றால் கூட நாங்கள் வாங்கித் தருகிறோம். அரசுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சட்டை, பேண்ட் மற்றும் வேஷ்டி தான் அணிய வேண்டும் என்பது மரபு. இனி வரும் அரசு நிகழ்ச்சிகளில் உதயநிதி உடை விஷயத்தில் இதையே தொடர்ந்தால் அவருக்கு எதிராக அதிமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்'' என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details