திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர், முக்கிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதனைப் பயன்படுத்தி, இன்று (ஏப்ரல் 28) தருமபுரியைச் சேர்ந்த ரமேஷ் பாபு (53) என்பவர், எம்.ஏ படித்த இவர் தான் மாவட்ட நீதிபதி என்று இவரே திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, தான் இன்று பழனி மலைக் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருவதாகவும், சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் நீதிமன்ற ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து, இன்று மாலை ரமேஷ் பாபு மூன்று நபர்களுடன் வருகை தந்துள்ளார். அப்போது பழனியைச் சேர்ந்த நீதிமன்ற ஊழியர்கள் தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை அனுமதி வாங்க வேண்டும் என்றும், அதற்கு தங்களின் அடையாள அட்டையைக் கேட்பதாகக் கூறியுள்ளனர். அதற்கு முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதில், நீதிமன்ற ஊழியர்களுக்கு சந்தேகமடைந்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆய்வாளர் மணிமாறன் தலைமையில், அடிவாரம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து நடத்திய விசாரணையில், தருமபுரியில் எங்கு பணிபுரிகிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் இப்போது தருமபுரியில் பணியில் இல்லை என்றும், தன்னை தேர்தலுக்காக சேலத்திற்கு மாற்றம் செய்துள்ளதாக முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ரமேஷ் பாபு நீதிபதி இல்லை என்றும், இவர் சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்டு வருவதும், போலியாக மாவட்ட நீதிபதி என்ற பெயரைப் பயன்படுத்தி இது போல பலமுறை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்றிருப்பதும், இன்று காலை தேனி மாவட்டம், தேவதானப் பட்டியில் உள்ள மூங்கிலினை காமாட்சி அம்மன் கோயிலுக்கும், இன்று மதியம் திண்டுக்கல் அருகே உள்ள இராமலிங்க பட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோயிலுக்குச் சென்று விட்டு மாலை பழனி முருகன் கோயிலுக்கு வந்துள்ளார்.
இதன் அடிப்படையில், போலி நீதிபதி ரமேஷ் பாபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சைரன் வைத்த காருடன் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மூதாட்டியை கடித்து குதறிய முதலை.. அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி - A Crocodile Bit An Old Woman In TN