சென்னை: கண்ணகி நகரைச் சேர்ந்த முத்து(39) என்பவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பெருங்குடி, காமராஜ் நகர் 3வது குறுக்கு தெருவில் தங்கிக் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். உடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 பேர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதில் முத்து(39), கோயம்புத்தூரை சேர்ந்த சந்துரு(22), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா(45), மூவரும் ஒரு மாதமாக வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் சந்துரு, ராஜா ஆகிய இருவரையும் முத்து, நான் தான் பெரிய ரௌடி, என்னை மீறி எதுவும் செய்யக்கூடாது எனக் கத்தியை காட்டி தொடர்ந்து மிரட்டி அடித்து வந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி முத்துவும், சந்துருவும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மதுபோதையில் சந்துரு, முத்துவிடம் இருந்த கத்தியை எடுத்து அவரது முகத்தில் வெட்டியுள்ளார். பின்னர் ராஜாவிடம் கத்தியை கொடுத்த போது, அவரும் அதே கத்தியில் வெட்டி முத்துவை கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து முத்துவின் உடலை அருகிலேயே குழி தோண்டி புதைத்துள்ளனர். இதனையடுத்து ராஜா மற்றும் சந்துரு இருவரும் கோயம்புத்தூர் தப்பிச் சென்றுள்ளனர்.