சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்திற்கும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி அதை ஊடகங்களுக்கு செய்தியாக வெளியிட்டு வருகின்றனர்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதாக ஒரு தரப்பும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுவதாக மற்றொரு தரப்பும் குற்றம் சாட்டி வரும் நிலையில் உதவி பேராசிரியர் வைத்தியநாதன் வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் ஆழ்ந்து உறங்கும் காட்சிகளை, பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேகமாக அளித்ததார்.
அதனை செய்தியாக நமது ஊடகம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ஈடிவி பாரத் சேலம் செய்தியாளர் உதவி பேராசிரியர் வைத்தியநாதனை தொடர்பு கொண்டு அந்த வீடியோ குறித்து கேட்டபோது, கரோனா காலகட்டத்தில் சிறப்பு வகுப்பு எடுத்தபோது இந்த வீடியோவை திட்டமிட்டு எடுத்ததாகவும் அந்த காலத்திலேயே இந்த வீடியோ குறித்து நிர்வாகம் தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும் அதற்கு உரிய பதில் அளித்ததாக கூறினார்.
மேலும், நீண்ட நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் தன் மீதான குற்றச்சாட்டு மீது விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு அதில் தவறு ஏதும் இல்லை என்று உணர்ந்து நிர்வாகம் தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது பதிவாளர் பொறுப்பில் இருந்த தங்கவேல் பணியில் இருந்த போது இது தொடர்பான நடவடிக்கை அவர் எடுத்திருக்கலாம்.
ஆனால், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வீடியோவை வேண்டும் என்று திட்டமிட்டு வெளியிட்டு தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.மேலும், பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடு சம்பவங்களை வெளிப்படுத்திய காரணமாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தன்னை முடக்கும் நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்தில் தன்மீது ஊழல் முறைகேடு அல்லது உடன் பணியாற்றும் நபர்களுக்கு ஏதேனும் தொல்லை கொடுத்தேன் என்பது போன்ற எந்த புகாரும் இல்லாத காரணத்தினால் நேர்மையாகச் செயல்படும் தன்னை போன்ற நபர்களுக்கு இந்த நிர்வாகம் தொல்லைகளைக் கொடுத்து வருகிறது. பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தனக்கு எந்த நெருக்கடி கொடுத்தாலும் அதை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக வைத்தியநாதன் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: வகுப்பறையில் பேராசிரியர் செய்த செயல்.. ஈடிவி பாரத்திற்கு கிடைத்த பிரத்யேக வீடியோவின் பின்னணி என்ன? - Salem Periyar University Issue