தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புலம்பெயர் வாக்காளர்களை குறிவைத்து கோவையில் ஹிந்தி போஸ்டர்.. பிரிவினையை தூண்டும் செயல் என த.பெ.தி.க புகார்! - coimbatore hindi poster issue - COIMBATORE HINDI POSTER ISSUE

Coimbatore hindi poster issue: கோவையில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலைக்கு ஆதரவாக வட மாநில மொழியில் போஸ்டர் ஒட்டி, தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதாக, பாஜக மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்துள்ளனர்.

Periyar Dravidar Kazhagam
Periyar Dravidar Kazhagam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 12:05 PM IST

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்தி மொழி போஸ்டர் விவகாரம்

கோயம்புத்தூர்:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முக்கிய அரசியல் பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில், கோவையில் வடமாநில இந்தியர்களைக் குறி வைத்து, இந்தி மொழியில் தேர்தல் பிரச்சார வாசகங்களுடன் ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வட இந்திய ஒற்றுமை மன்றம் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், அந்த போஸ்டரில், "வட நாட்டு சகோதரர்களே நாம் இந்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அதற்கு வாக்களித்தால் விரைவிலே மோடி வருவார். 400 நாடாளுமன்ற இடத்தை அவர் பெறும் போது, கோவையையும், திருப்பூரையும் குஜராத்தோடு இணைத்துவிடுவார். அதற்கு பாஜகவில் ஒரு சிங்கம் அண்ணாமலை இருக்கிறார். அவருக்கு வாக்களிக்க வேண்டும். மோடிக்காக வாக்களியுங்கள். நமது குஜராத்திற்காக வாக்களியுங்கள். உத்தர பிரதேசத்திற்காக வாக்களியுங்கள். ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் பாரத் மாதா கி ஜே" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கோவையில் வட மாநில வாக்காளர்களைக் குறிவைத்து இந்தி மொழியில் பிரச்சார போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தேர்தல் விதியை மீறி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், "அமைதியாக இருந்து வரும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஏற்கனவே வட மாநிலத் தொழிலாளர்கள் எங்கேயோ அடித்துச் சண்டையிட்டதனை, கோவையில் வட மாநில தொழிலாளர்களை அடித்துத் துன்புறுத்தியதாக சமூக வலைத்தளத்தில் பழைய காட்சிகளைப் பகிர்ந்து, தமிழ்நாட்டு மக்கள் மீதும், மு.க.ஸ்டாலின் அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தினர்.

ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிளவு ஏற்படுத்துவதற்காக இதுபோன்று இந்தி மொழியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி, ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பிரச்சாரத்தின் போது ஆராத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை பணம் கொடுத்தார் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, அண்ணாமலை அவரது சமூக வலைதளப்பக்கத்தில், இந்த வீடியோ ராமநாதபுரம் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்டது.

பாசத்தின் அடையாளமாக ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது கலாச்சாரத்தில் உள்ளது. ஆனால், தேர்தல் நேரத்தில் இதை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. மற்றவர்களைப் போல வாக்குகளுக்காகப் பணத்தில் நம்பிக்கை வைக்க மாட்டோம் என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இன்று பொய்களைப் பரப்பும் கட்சிகளால் உண்மையான பணப் பரிமாற்றம் நடக்கும் போது கோயம்புத்தூர் ஆட்சியர் விழிப்புடன் இருக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் - DANIEL BALAJI

ABOUT THE AUTHOR

...view details