மயிலாடுதுறை: தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை அருகில் ரூ.114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதன் முறையாக மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது. அங்கு, 200க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் குறைதீர் கூட்டம் என்பதால் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றதால், மனு அளிக்க வந்த பொதுமக்கள் கூட்டரங்கிற்கு வெளியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், புதிய ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிப்பதற்கு முறையான முன்னேற்பாடுகள் மற்றும் உரிய அறிவிப்புகள் செய்யப்படாததால் மனு அளிக்க வந்த மக்கள், மனுக்களை எங்கு அமர்ந்து எழுதுவது மற்றும் மனுக்களை எங்கு பதிவு செய்வது குறித்து உரிய தகவல் தெரியாமல் அவதிக்குள்ளாகினர். மேலும், கழிப்பிடம் மற்றும் குடிநீர் இருக்கும் இடத்திற்கான அறிவிப்பு பலகைகள் போதிய அளவில் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து மனு அளிக்க வந்த செந்தில்குமார் கூறுகையில்,"கடந்த வாரத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டது. முதல் முறையாக மனு கொடுப்பதற்காக இங்கு வந்துள்ளோம். ஆனால், இன்று இங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்கள் ஒழுங்கு முறையில் நடத்தப்படவில்லை. 25 வருடமாக வந்து செல்லும் எனக்கு எங்கு மனு பதிவு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு கடினமாக உள்ளது. எனவே, இதற்கு மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடைமுறைகளை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கென்று தனி வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மக்களுக்கு முறையான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு கூறினார்.
குறைதீர் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களின் தேவைக்கு, கூட்ட அரங்கிற்கு வெளியே மாவட்ட நிர்வாகம் உரிய குடிநீர் வசதி செய்து தராததால், மன்னம்பந்தல் ஊராட்சி சார்பில் 2 இடங்களில் கேன்களில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, வருகிற காலங்களில் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உரிய அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்றும் மனு அளிப்பதற்கு முறையான வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:"பாஜகவுடன் கூட்டணி உறுதி.. அணிலைப் போல் உதவிகரமாக இருப்போம்" - டிடிவி தினகரன் பேட்டி!