திருப்பூர்:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் விட்டு விட்டு மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், திருப்பூரில் வீரபாண்டி, காந்திநகர், அங்கேரி பாளையம், பாளையக்காடு, நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால், வீரபாண்டி அடுத்த பழவஞ்சிபாளையம், காலனி பகுதியில் தண்ணீர் சூழ்ந்து, அப்பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு மழை நீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், "கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் குழந்தைகளுடன் இப்பகுதியில் வசித்து வருகின்றோம். ஆனால், இதற்கு முன்னர் வரை மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது கிடையாது. தற்போது குட்டை பகுதியில் புதிதாக வீரபாண்டி காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதற்காக அப்பகுதியில் மண் கொட்டி மேடாக மாற்றியுள்ளனர். அதனால், கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழைக்கும் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. தற்போது மீண்டும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது" எனத் தெரிவித்தனர்.