தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மினி கஷ்மீராக மாறிய உதகை.. கடும் உறைப்பனி பொழிவால் மக்கள் அவதி! - OOTY SNOW FALL

உதகையில் துவங்கிய கடும் உறைப்பனி பொழிவால் மினி காஷ்மீர் போலக் காட்சியளிக்கிறது. ஆயினும் இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உதகையில் பனிப்பொழிவு
உதகையில் பனிப்பொழிவு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2024, 3:25 PM IST

நீலகிரி:உதகையில் கடும் உறைப்பனி பொழிவு துவங்கியுள்ளது. இந்த நிலையில், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியதால் பச்சை பசும் புல்வெளிகள் மீதும், வாகனங்களின் மீதும், வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் கொட்டிய உறை பனியால் உதகை மண்டலம் மினி காஷ்மீர் போல் மாறியுள்ளது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாதம் வரை உறைபனி பொழிவு காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கடந்த சில நாட்களாக அவ்வப்போது புயல் மற்றும் கனமழை பெய்து வந்ததால் உறைபனி பொழிவு டிசம்பர் மாத இறுதியில் தான் துவங்கியுள்ளது.

தீ மூட்டி குளிர் காயும் மக்கள் (ETV Bharat Tamil Nadu)

கடும் குளிரால் மக்கள் சிரமம்: குறிப்பாக, உதகையில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்றிரவு குளிரின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் உதகையின் பல்வேறு இடங்களில் உறைப்பனி பொழிவு காணப்பட்டது. அதிலும், உதகை குதிரைப் பந்தய மைதானம், காந்தல், அரசு தாவரவியல் பூங்கா, தலை குந்தா ஆகிய பகுதிகளில் உறைப்பனி பொழிவு அதிகமாக காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:திருச்சியில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ்.. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

நீர்நிலைகள், தாழ்வான பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள பச்சை பசும் புல்வெளிகள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் பனி படர்ந்து, மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது. அதேபோல், சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது பனிப்படர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க உள்ளூர் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பனி படர்ந்துள்ள காட்சி (ETV Bharat Tamil Nadu)

3 டிகிரி செல்சியஸ்:உதகையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும், இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. மேலும் அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இனிவரும் நாட்களில் நகர்ப்புறங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ள நிலையில், உதகையில் இன்று பெய்த உறைப்பனி காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. மேலும், தங்களைக் குளிரிலிருந்து பாதுகாக்க அதிகாலை நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் பல இடங்களில் தீ மூட்டி தங்கள் உடலை சூடேற்றி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details