தூத்துக்குடி:தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளில் இம்மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி நேற்று (புதன்கிழமை) மாலை தூத்துக்குடி அடுத்த குறுக்குசாலை பகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் நின்று பேசிய கனிமொழி, "இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். யார் ஆட்சிக்கு வர போகிறார்கள் என்பதை தாண்டி, நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேர்தல்.
ஏனென்றால் புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போது அதில் ஒரு நுழைவுத் தேர்வு கொண்டு வந்து, நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது, நல்ல வேலைக்கு வரக்கூடாது, அவர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பாஜக இவ்வாறு செயல்படுகின்றது.
நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கீடு இருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு காப்பாற்றப்பட்டும் நம் பிள்ளைகள் படித்து நல்ல வேலைகளுக்கு போக வேண்டும் என்றால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் வரும் தேர்தலில் நாம் பாஜகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு "இந்தியா" கூட்டணி (INDIA Alliance) ஆட்சியில் அமர்த்த வேண்டும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பாக ஆட்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது குறித்து பேசுகையில், "பத்திரிகைத்துறை நண்பர்களிடம் கேட்டால் தெரியும் அவர்களுக்கு இருக்கும் நெருக்கடி. மோடியை எதிர்த்து ஏதாவது எழுதினால் அவர்களின் முதலாளி வீட்டிற்கு ரெய்டு.
அதையும் மீறி எழுதினால் அவர்கள் வேலையை விட்டு நீக்கிப்படுகின்றனர். அவர்களை கைது செய்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இன்னும் கௌரி லங்கேஷ் போன்ற சில பத்திரிகையாளர்கள் பாஜக ஆட்சியில் கொலை செய்யப்பட்டுள்ளனர்" எனக் கூறினார்.