தேனி: வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக நீர் கொண்டு செல்வதற்காக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எ.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான எ.புதூர், மறுகால்பட்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களை ஒட்டி உள்ள பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.
இதனால், வெட்டப்பட்ட வாய்க்காலின் மறு கரையில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு செல்வதற்கும், இறந்தவர்களின் உடல்களை மயான கரைக்கு செல்வதற்கும், திருவிழா காலங்களில் வைகை ஆற்றில் சென்று சுவாமிகளை அலங்காரம் செய்து வருவதற்கும், சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பாலம் கட்டித்தர மீண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீர் பாசன வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படாததால் பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதோடு, கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரையில் பாலம் கட்டப்படவில்லை. இதனால், வாய்க்காலின் மேல் புதிய பாலம் கட்டி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.