தேனி: மதுரை, தேனி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.பி சொசைட்டி என்ற பெயரில் அபாஸ்கான் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். சுமார் 150 நபர்களிடம் வைப்புத் தொகையாக ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பெற்று, அவர்களை நிதி நிறுவன பணியாளர்களாக இணைத்துக் கொண்டுள்ளார்.
மேலும், நிறுவனத்தில் சேர்ந்த நபர்கள் மூலமாக வாடிக்கையாளர்களை சேர்க்கும் முயற்சியை கடந்த மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். பின்னர், தங்களை நம்பிய வாடிக்கையாளர்களிடம் சிறுசேமிப்பு, மாத சேமிப்பு என்று பெற்று முதிர்வு காலம் முடிந்தபின் பல மடங்கு வட்டியுடன் சேர்த்து தருவதாக ஆசை வார்த்தை கூறி, பலரிடம் பணத்தைப் பெற்றது தெரிகிறது.
இவ்வாறு, தங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் மூலம், அவர்களுக்கு தெரிந்தவர்களை இந்த நிறுவனத்தின் திட்டத்தில் இணைத்து அவர்களின் முதலீடு செய்ய வைப்பது என கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம், 7 கோடி ரூபாய் வரை பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் முதிர்வு காலம் முடிந்ததை அடுத்து முதலீடு செய்த தொகையை நிதி நிறுவன உரிமையாளரான அபாஸ்கானிடம் கேட்டுள்ளனர். பணத்தை திருப்பி தருவதாகக் கூறி காலதாமதம் செய்து வந்த நிலையில், தற்போது அந்த நிறுவனத்தினர் தங்களின் அனைத்து கிளைகளையும் மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதை அறிந்த மக்கள், தங்களை ஏமாற்றிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், தாங்கள் முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தர வேண்டியும், நேற்று (பிப்.20) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.