மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், வள்ளலாகரம் ஊராட்சி, லட்சுமி புரத்தில் விவேகானந்தர் தெரு, ரஃபிக் நகர், வில்வம் நகர், ஆர்.எஸ்.எஸ் பிரிமியர் கார்டன், பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பொதுமக்கள் பங்களிப்பு நிதியில் ஊராட்சி சார்பாக, 17 மின்கம்பங்களுக்கு நேரிடையாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்பு, அப்பகுதியில் ஆய்வு செய்த மின்சாரத் துறையினர், நேரிடையாக தெருவிளக்குகளுக்குக் கொடுக்கப்பட்ட மின் இணைப்புகளைத் துண்டித்துள்ளனர். இதனால் மின்சாரம் இல்லாமல் தெருக்கள் இருளில் மூழ்கின. இதன் காரணமாக, இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்கள் குடியிருப்பதற்குத் தேவையான மின்சாரம், குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், மின் கம்பங்களின் இணைப்பைத் துண்டித்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இருளில் மூழ்கடித்த மின்சாரத் துறையைக் கண்டித்தும், குடியிருப்புப் பகுதிகளுக்கு உரிய முறையில் மின்சாரம் வழங்காத ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், அப்பகுதி மக்கள் கையில் தீப்பந்தங்களை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட மின்கம்பங்களில் தீப்பந்தங்களைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்திய அப்பகுதி மக்கள், உடனடியாக சாலையில் உள்ள மின் கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.