சேலம்:சேலம் அருகே மாமாங்கம் பகுதியில் பழமையான ராமர் பாதம் கோயில் உள்ளது. இதனைச் சுற்றி உள்ள கன்னிமார் தெய்வங்கள் உள்பட பல பழங்கால கற்சிலைகளையும், அப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ராமர் பாதம் உள்ள இடத்தை செயில் ரீ பேக்டரி (SAIL Refractory Company Limited) நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், ஜேசிபி வாகனம் மூலம் அப்புறப்படுத்த முயற்சி செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ராமர் பாதம் அமைந்துள்ள பகுதியில் ஜேசிபி வாகனம் மூலம் சமன்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது, அதனை தடுத்து நிறுத்தி அந்த வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிலத்தை சமன் செய்யும் பணியினை தடுத்து நிறுத்தினர்.
சேலம் செயில் ரீ பேக்டரி நிறுவனத்திற்கு அருகில் உள்ள இந்த புறம்போக்கு நிலத்தை அதிகாரிகள் தனது சொந்த பயன்பாட்டிற்காக ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கிராம மக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இதையும் படிங்க :சேலம் ராமர் பாதம் கோயில் விவகாரம்: தாசில்தார் உத்தரவுக்கு இடைக்காலத் தடை - Salem Ramar temple
இது தொடர்பாக ராமர் பாத பக்தர்கள் குழுவைச் சேர்ந்த துரைசாமி கூறும் போது, "வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், இந்த இடத்தை நிரவ உள்ளதாக பொய்யான தகவலைக் கூறி, சேலம் மேற்கு துணை தாசில்தார் கீர்த்தி வாசன், ராமர் பாதம் உள்ள இடத்தை அழிக்க தனியார் நிறுவன அதிகாரிகளை தூண்டி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். கிராம மக்கள் சார்பில் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மேலும், புரட்டாசி மாதம் துவங்க உள்ள நிலையில், பக்தர்கள் ராமர் பாதத்தை வழிபடக் கூடாது என்ற எண்ணத்தில் அதிகாரிகள் இது போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுவது வேதனை தருகிறது.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி பாதை அமைக்க தான் நிரவல் பணி நடக்கிறது என்று நினைத்தோம். ஆனால், இன்றுதான் ராமர் பாதம் கோயிலை அழிக்கத்தான் பணி நடக்கிறது என்று புரிந்தது. எனவே அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி ராமர் பாதத்தை வழிபட வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்தார்.